Saturday 27 August 2011

ஜெயலலிதாவுக்கு எதிராக டில்லியில் ஈழத் தமிழ் கட்சிகள் மாநாடு

ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பிக்கும் இக்காலத்தில் அவருடன் எந்தப் பேச்சிலும் ஈடுபடாமல் தமிழ் கட்சிகள் குறிப்பாக கூட்டமைப்பு துரோகம் செய்த மத்திய அரசுடன் மட்டும் பேசுவதால் எதையும் பெற்று விடப் போவதில்லை. இந்தியாவின் பிரித்தாளும் தந்திரத்தில் நாம் சிக்கி விடக் கூடாது.

ஜெயலலிதா ஊடாக ஒரு நாடு இரு தேசம் போன்ற வலுவான கோரிக்கைகளை வைக்க முயற்சிக்காமல், 13 ம் திருத்தத்தையே மீண்டும் கதைப்பதில் பயன் இல்லை.

மகாநாட்டில் நடந்ததைப் பாருங்கள். இந்திய விசுவாசிகளைப் பாருங்கள்.

புதுடில்லி மாநாட்டில் இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளினால் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தீர்மானத்தை எட்டுவதற்க்கு அனைத்துக் கட்சிகளும் ஆரம்பத்தில் உடன்பட்டிருந்தன.

பின்னர் மாநாட்டுக்கு வந்த சுதர்ஸனம் ஏற்கனவே தயாரித்த அறிக்கையை பார்வையிட்டு அதன் சில பகுதிகளை மாற்றி எழுதும் படி மீள மீள வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

அதனால், இந்திய விசுவாசிகளான புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி), ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய கட்சிகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. குறித்த அறிக்கையில் உள்ள சுயநிர்ணய உரிமை மற்றும்  தமிழர்தேசம் என்ற சொற்களை நீக்கவேண்டும் எனவும் நீக்காவிடின் கையெழுத்திடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளர்.

பின்னர் சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் ஆகிய சொற்கள் உள்ளடங்கிய அறிக்கையை கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி, ரெலொ, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் காங்கிரஸ் ஆகியன கையொப்பம் இட்டு சமர்ப்பிக்கலாம் என்ற கோரிக்கைக்கு  கூட்டமைப்பு  உடன்படவில்லை.

இந்நிலையில் குறித்த சொற்கள் உள்ளடங்கிய அறிக்கையை தமிழ்க் காங்கிரஸ் தனியாகச்  சமர்ப்பித்திருக்கிறது.  அந்த  அறிக்கையின் பகுதி இது:

"இலங்கைத் தீவிலுள்ள தமிழ் மக்கள் தனியொரு இனமாக தமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையர் எனவும் அங்கீகரிப்பது இன்றியமையாததொன்று என்பது எங்கள் வலுவான கருத்தாகும்.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் மட்டுமே இலங்கை அரசுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் அர்த்தமுள்ளதாக அமையமுடியும்.

ஆதலால், தமிழ்த் தேசம் முன்வைக்கும் இந்த உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறும் ஒரே நாட்டினுள் எட்டப்படத்தக்க எந்தவொரு தீர்வுக்கும் இதுவே அடிப்படையாக அமையுமென இடித்துரைக்குமாறும் நாங்கள் இந்திய நாட்டிடமும் அனைத்துலக சமூகத்திடமும் விண்ணப்பஞ் செய்துகொள்கின்றோம்."

இதை ஏற்க மறுக்கும் கூட்டமைப்பு நிச்சயமாக் சுமந்திரன் கூருயவாறு பாதை மாறிப் போகிறார்கள். மீண்டும் ஒருதடவை மக்களை ஏமாற்றப் போகிறார்கள். 

No comments: