Wednesday 30 March 2011

யாழ் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம்

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மருத்துவப் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரத்தினம் நியமிக்கப் பட்டுள்ளார்.  
 
கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்வதில் பல அரசியல் தலையீடுகள் காரணமாக  தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலிங்கன்  பணியாற்றினார்.
 
போராசியர் இரட்ணஜீவன் ஹூல்  தன்னை துணைவேந்தராக  நியமிக்க பல அரசியல் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தார். 
 
கடந்த மூன்று வருடங்களாக யாழ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் என். சண்முகலிங்கன் யாழ் பல்கலைக்கழகத்தின் ஏழாவது துணைவேந்தராக  பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  யாழ் பல்கலைக்கழக எட்டாவது துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Monday 28 March 2011

போரினால் கிழக்கில் 13,000 மக்கள் அங்கவீனமடைந்துள்ளனர்

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அரச தரப்பு இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

திருமலை மாவட்டத்தில் 660 பேர் பார்வைப்புலத்தை இழந்துள்ளனர், 689 பேர் பேசும் மற்றும் கேட்கும் சக்தியை இழந்துள்ளனர், 1,005 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,030 பேர் இயங்கும் சக்தியை இழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 671 பேர் பார்வைப்புலத்தை இழந்துள்ளனர், 1,105 பேர் பேசும் மற்றும் கேட்கும் சக்தியை இழந்துள்ளனர், 884 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,650 பேர் இயங்கும் சக்தியை இழந்துள்ளனர், 594 பேர் பல்வேறு வகையான பாதிப்புக்களால் சுயமாக இயங்கமுடியாத நிலையில் உள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 635 பேர் பார்வைப்புலத்தை இழந்துள்ளனர், 417 பேர் பேசும் மற்றும் கேட்கும் சக்தியை இழந்துள்ளனர், 780 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,650 பேர் இயங்கும் சக்தியை இழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணு உலை வெடித்தால்

இந்தியாவில் உள்ள அணு உலைகள் வெடித்தால் அது சிறீலங்காவை முற்றாக அழித்துவிடும் சாத்தியங்கள் உள்ளதால் அதனை தடுப்பதற்கு என்ன செய்வது என சிறீலங்கா அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

அண்மையில் யப்பானில் ஏற்பட்ட அணு உலை வெடிப்புக்கள் உலகின் பல நாடுகளின் நிம்மதியை கெடுத்துள்ளது.

சிறீலங்காவுக்கு அண்மையாக தென்னிந்திய மாநிலங்களில் இந்தியா அதிக அணுஉலைகளை நிறுவியுள்ளது. இந்தியாவில் 17 அணு மின்உலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று கல்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அது சிறீலங்காவுக்கு மிகவும் அண்மையாக உள்ளது. 

இயற்கை அனர்த்தத்தை விட தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கூட  இந்த அணு உலைகள் மீது நடக்கலாம்.

Saturday 26 March 2011

வடக்கின் கடைசி செஞ்சிலுவைச் சங்க அலுவலகமும் மூடப்பட்டது

வடக்கின் கடைசி  செஞ்சிலுவைச்  சங்க  அலுவலகமும்  மூடப்பட்டுள்ளதாக சர்வதேச  செஞ்சிலுவைச்  சங்கம்  அறிவித்துள்ளது. சுமார் 14வருட செயற்பாட்டின் பின் அந்த அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

வடக்கில் கடைசியாக எஞ்சியிருந்த ஒரேயொரு செஞ்சிலுவைச் சங்க அலுவலகமான வவுனியா அலுவலகமே 25ம் திகதியுடன்  மூடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவல்களை கொழும்பில் இருந்து மேற்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே அதன் கிளை அலுவலகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தன.

கடந்த பெப்ரவரி மாதத்தின் கடைசிப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த அதன் அலுவலகமும் மூடப்பட்டிருந்தது.

மன்னாரில் மீண்டும் சிங்களப் பாடசாலை ஆரம்பம்

நீண்ட  கால  இடைவெளியின்  பின் மன்னார்  மடு  வீதியில் அமைந்திருந்த சிங்கள  மகா  வித்தியாலயம்   நேற்று  முன்தினம்  மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  சுமார் 26 வருடங்களின்  பின் அப்பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அப்பாடசாலையில் உயர்தரம் வரையான வகுப்புகள் செயற்பட்டன. அதன்  பின் வந்த காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரஸ்தாப பாடசாலை 1985ம் ஆண்டுகளில் மூடப்பட்டது. 

கொழும்பில் அமையப்பெறவுள்ள ஐஸ்வர்யலக்ஷ்மி கோயில்

கொழும்பில் அமையப்பெறவுள்ள ஐஸ்வர்யலக்ஷ்மி கோயில் ஒன்றை அமைக்கும் முயற்சியில் கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜ் ஈடு பட்டு வருவதாகத் தெரிகிறது. 

கொழும்பில் 95 வீதமாக இருந்த சிங்கள இனம் 27 வீதமாக குறைந்துள்ளது - ஜனாதிபதி

பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் 95 சதவீதமான சிங்கள மக்கள் வாழ்ந்தனர். எனினும் தற்போது 27 வீதமான சிங்களவர்களே கொழும்பில் வாழ்கின்றனர். இவ்வாறு கொழும்பில் ஏனைய இனங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இனங்கள் யாவும் ஒற்றுமையுடன் வாழும் போது, அரசியல்வாதிகளே, தமது அரசியல் நோக்கத்திற்காக பிரச்சினைகள் இருப்பதாக வெளிக்காட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

Friday 25 March 2011

வடக்கின் தமிழ் மீனவர்களுக்கு பாரிய அநீதி

இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பிற்கு வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதால், வடக்கில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
யுத்தம் நடைபெற்ற போது, அமுல்படுத்தப்பட்டிருந்த மீன்பிடி தடைகள் தற்போது, நீக்கப்பட்டுள்ளது. எனினும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்து, மீன்வளத்தை அள்ளி செல்வதால், வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த பிரச்சினைக்கு  தீர்வுகாண  இந்திய- இலங்கை  இடையிலான ராஜதந்திர ரீதியிலான வேலைத்திட்டங்கள் அவசியம்.

எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்

நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத்  தகவல்கள்  வெளியாகியுள்ளன.
 
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
 
இந்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பான நோர்வேயின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழ்ப் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக எரிக் சொல்ஹெய்;ம் இந்த சந்திப்பினை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செய்வதற்கும், காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும்  புலம்பெயர்  தமிழர்கள், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியமானது என  சொல்ஹெய்ம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படுத்த துணைய புரியத் தயார் எனவும்  நோர்வே அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதே வேளை, இந்தத் திட்டத்தை நோர்வே புலிச் செயற்பாட்டாளர்கள்  நிராகரித்துள்ளதாக  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாங்குளத்தில் விளையாட்டு வளாகம்

போரினால் பாதிக்கப்பட்ட மாங்குளத்தில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு வளாக கட்டுமானத் திட்டத்துக்கு உதவ பிரித்தானிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் இயன் போத்தம் முன்வந்துள்ளார்.

வடமாகாணத்தின் இதயப்பகுதியான மாங்குளத்துக்கு அருகே இந்த சமூக விளையாட்டு வளாகத்தை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் வீரர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவைத் தளமாகக் கொண்ட அறக்கட்டளை நிறுவனம் ஒன்று சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் மாங்குளத்துக்கு அருகே சமூக விளையாட்டு வளாகத்தை அமைக்க முன்வந்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் அந்தப் பகுதிகளுக்கு  சென்றிருந்த இயன் போத்தம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தை  அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

கணனி மயப்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைகள்

புதிய விடயங்களை உள்ளடக்கிய கணனி மயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். 

புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய

ஸ்ரீ லங்காவின்  புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். இன்று 25ம்  திகதி  முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த  நியமனம்  வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளராக இருந்த தயானந்த திஸாநாயக்க ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

சிறிலங்காவின் புதிய தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரிய தற்போது பிரதித் தேர்தல் ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.

சிறிலங்கா அரசின் அச்சுறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேறிய பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவின் சகோதரரே, புதிய தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த தேசப்பிரிய என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள  தேர்தல்  ஆணையாளர்  தயானந்த திசநாயக்க  நீண்ட காலமாகவே  தன்னை இந்தப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் கோரி வந்தார். 

Wednesday 23 March 2011

ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களிடம் வருமான வரி அறவிட அரசு தீர்மானம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களிடம் வருமானவரி அறவிடப்படவுள்ளது. வரவு  செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி  சகல  கொடுப்பனவுகளுடன்  ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட  சம்பளம்  பெறும்  சகல  அரச  ஊழியர்களும் வருமான  வரி செலுத்த  வேண்டியுள்ளது.

1978
ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களது வருமான வரி நீக்கப்பட்டிருந்தது. 33 வருடங்களின்  பின்  மீண்டும்   வருமான  வரி  செலுத்தும்  நடைமுறை  அரச ஊழியர்களுக்குக்  கொண்டு  வரப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

எதிவரும் ஏப்ரல் மாதம் முதல்  நடைமுறைக்கு வரும்  இந்த  சட்டத்தின்  பிரகாரம், 50,000 ரூபாய்களுக்கு  மேல் மாத வருமானம் பெறுபவர்கள் வரிகளைச் செலுத்த வேண்டும்.

50,000 ரூபாயில் இருந்து 91,667 ரூபாய்கள் வரை மாத வருமானம் பெறுபவர்கள் 4 விகிதமும், 91,667 ரூபாயில் இருந்து 133,333 ரூபாய்கள் மாத வருமானம் பெறுபவர்கள் 8 விகித வரியும் செலுத்த வேண்டும்.

அதேசமயம், 133,333 ரூபாயில்  இருந்து 175,000 ரூபாய்கள்  வரை  மாத வருமானம் பெறுபவர்கள் 12 விகிதமும், 175,000 ரூபாயில் இருந்து 216,667 ரூபாய்கள் மாத வருமானம் பெறுபவர்கள் 16 விகித வரியும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 10 March 2011

இலங்கை - கனடா நேரடி விமான சேவை

வரலாற்றில் முதல் முறையாக இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு பிரிட்டன்  அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் பிரிட்டனுக்கும்  இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

இதன்கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு வாரத்தில் 7 பயணங்களை கனடாவின் டொரொன்டோ விமான நிலையத்திற்கு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இணக்கப் பாட்டின் கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு கொழும்பி லிருந்து லண்டன் ஊடாக கனடாவின் டொரொன்டோ வரையில் பயணிகளைக் கொண்டு செல்வதற்கும் கொண்டு வருவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது. 

புதிய ஒப்பந்தத்தின் பயனாக இதுவரையில் இலங்கைக்கும் லண்டனுக்கும் இடையில் நிலவிவந்த வாரத்தில் 13 பயணங்கள்,  வாராந்தம் 21 பயணங்களாக அதிகரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.