Friday 18 February 2011

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்; புலம்பெயர் தமிழர்கள் மீதான பழிவாங்கலா?

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாட்டை
தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி,  இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை  வழங்குவதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும்  அங்கீகாரத்துக்காக  சமர்ப்பிக்கப்  பட்ட  விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. 

ஆனால், ஏற்கனவே  இரட்டைப்  பிரஜாவுரிமை  உள்ளவர்களை  இது  பாதிக்காது.  அவர்கள்  தொடர்ந்தும்   இரட்டைப்  பிரஜாவுரிமை  உள்ளவர்களாகவே  இருப்பார்கள்.

வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கையர்  மேலதிக  வரியோ  ஏனைய  கட்டுப்பாடோ  இல்லாமல்   இலங்கையினுள்ளும்  சொத்துக்கள் வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும்  அவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற வேண்டுமென்பது அவசியமாகும்.

இதற்காக ஒருவரிடமிருந்து இலங்கை அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவைக் கட்டணமாக அறவிட்டு வந்தது.

இதில் சில தீமைகளும் இருந்தன. இரட்டைப்  பிரஜாவுரிமை பெற்றவர் இலங்கையில்  உள்நாட்டவர் போல கருதப்படுவார். கைதானால், மற்றைய நாடு அவர்  தொடர்பில்  எந்த  நடவடிக்கையையும்  எடுக்காது. ஏனெனில் அவர்  இலங்கையில்  ஓர்  வெளிநாட்டவர்  அல்ல. இலங்கைக்கு வெளியில் எதுவும் நடந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாட்டு உதவியைத் தூதரகம் ஊடாக நாடலாம்.

பெரும்பாலும்  புலம்பெயர்ந்த   இலங்கைத்  தமிழர்களே   இரட்டைப் பிரஜாவுரிமை   திட்டத்தின் கீழ் பெருமளவில் நன்மையடைந்தனர். அதனால், இது  புலம்பெயர் தமிழர்களைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,  பசில் ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அமெரிக்காவிலும் பிரஜாவுரிமை பெற்ற இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 17 February 2011

யாழ் மீனவர்களின் பிரச்சனை; அரசாங்கங்களின் சதி; மீனவர்கள் பலி

சிறீலங்கா, இந்திய அரசாங்கங்கள் தமக்கிடையேயான மற்றொரு அரசியல் நகர்வை  சிலரின்   உதவியுடன்  அரங்கேற்றி  யுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த  செயற்பாட்டுக்கு, யாழ்ப்பாண  மீனவர்கள் பலியானார்களா? அல்லது  பலியாக்கப்பட்டனரா? என்ற  கேள்வி எழுந்திருக்கின்றது.

வடபகுதிக்  கடல் எல்லைக்குள் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை மீறுவது, உரிய  கடற்  கலங்களைப்  பாவிக்காது  மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது என்பது ஈழத்தமிழ் மீனவர்களை  மிகவும்  பாதித்து  வருவது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் அதனையே  காரணமாகக் கொண்டு  தமிழ்  மீனவர்கள் மத்தியில் பிரச்சினையை உண்டாக்க முயலும்  அரசாங்கங்களின்  கபடத்தனத்தை அடையாளம் காண வேண்டும்.

வழமையாக எல்லையிலேயே  சுட்டுத்தள்ளும் சிறீலங்கா கடற்படையினர், அவர்கள் பருத்தித்துறை கடல் எல்லைக்கு வரும்வரை அனுமதித்தமை, அதன் பின்னர் ஒருசில யாழ் மீனவர்கள் மூலமாக தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்தமை, பொலிசாரிடம்  கையளித்தமை, இதில் கடற்படையினர்  சம்பந்தப்படவில்லை  என  தொடராக  வரும்  செய்திகள்   சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் மீனவர்கள்  தமக்கிடையிலான மீன்பிடிப் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க  அனுமதிக்க  வேண்டும்.  இரு தரப்பினரையும் மோதவிட்டு  எதையோ  ஒன்றை  சாதிக்க   அரசாங்கம் நினைக்கின்றது. இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்தால், இரு தரப்பிற்கும் இடையிலான  உறவில் கசப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது ஈழத்தமிழ் மக்களிற்காக தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழுணர்வாளர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.

தேர்தல்  நாடகத்திற்காக  தமிழ்  மீனவர்கள்  கைதும், தி.மு.க ஆர்ப்பாட்டமும்  திட்டமிடப்பட்டு  அரங்கேரியும்  இருக்கலாம். இன்னும்  பல  நடக்கலாம்.  தமிழர்கள்  பலியாகலாம். 

ஆனால், யாழ்    மீனவர்களின்  பிரச்சனையும் மறைக்கப்பட  முடியாதது.  தீர்வு  காணப்பட  வேண்டியது.  

Monday 14 February 2011

ஒரு சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அரசியல் இயக்கம் சரணாகதி அடையலாமா?

அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச் சாட்டுக்களை சுமத்துவதை தவிர்க்குமாறு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசாங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் காரணமாக அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் பிரச்சினையாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கோரிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாய்திறக்காது என செய்தி  வெளியாகியுள்ளது. அது மட்டுமா?

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் குறித்து எடுத்து விளக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக விரைவில் மகாநாயக்கர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனுடன் இணைந்ததாக மகாநாயக்கர்கள் மற்றும் தெற்கின் ஏனைய முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோருடனும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாம்.

தனி  நபர்கள்  சரணாகதி  அடைவது  பற்றி  மக்களுக்கு  கவலையில்லை. ஒரு  சிறுபான்மை  இனத்தைப்  பிரதிநிதித்துவப்  படுத்தும்  ஒரு  அரசியல்  இயக்கம்  உரிமைகளைப் பெற பேசுவதாகக் கூறிக் கொண்டு இப்படியாக  நடந்து  கொள்வதை  எந்த தன்மானமுள்ள  தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

தமது  தவறை மறைக்க இராஜ தந்திரம் எனச் சொல்லலாமா?
மானம் போனபின் வாழ்வு எதற்கு?
முடியாவிட்டால் வழிவிட்டு ஒதுங்குவதே பொருத்தமானது. செய்வார்களா?

யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்தாவது நாளிதழ்

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான 'தினகரன்' நாளிதழ் அடுத்தமாதம் 2ம் திகதி யாழ்ப்பாணப் பதிப்பை  வெளியிடவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது உதயன், வலம்புரி, யாழ்.தினக்குரல், தினமுரசு ஆகிய  நான்கு நாளிதழ்கள்  வெளியாகின்றன. இந்தநிலையில் ஐந்தாவது நாளிதழாக தினகரனும் போட்டியில் இறங்கியுள்ளது.

ஈபிடிபியின் 'தினமுரசு' கடந்த ஒக்ரோபர் மாதம் தொடங்கம் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. வீரகேசரி  போன்றன  யாழ்ப்பாணத்திலிருந்து  வெளிவருவதில்லை. ஏனைய  பிரதேச பதிப்புகளே  யாழ்ப்பாணம்  வருகின்றன.

Saturday 12 February 2011

தமிழர்களைத் திருப்பி அனுப்புவது ஒரு நல்ல செய்தி தான்

சுவிட்சர்லாந்து  தமிழர்களை  மீளவும்  சொந்த  நாட்டிற்கு  அனுப்ப  நடவடிக்கை  எடுத்துக்  கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏனைய நாடுகளும் இதே நடவடிக்கைகளைத் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

முன்பு போல நெகிழ்வுத் தன்மையோடு முடிவுகள் வாபஸ்  பெற்றுக் கொள்ளக் கூடிய தன்மை இப்போது இல்லை.

யுத்தம்  முடிந்த  பின்னர் பல  காரணங்களைக்  கூறி  அகதி  அந்தஸ்து பெற்ற  பலர்  இலங்கைக்கு   சென்று   திரும்பியிருக்கிறார்கள்.  அதனால், புதிதாக  வருபவர்கள்  அகதி அந்தஸ்து  கோருவதற்கான  தார்மீக  ஆதரவை இழந்து  போயுள்ளார்கள். கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட இப்போது நியாயப்படுத்த  முடியாது.

இலங்கையில் தமிழர்கள் மீண்டும் குடியேறி தம்மைப் பலப்படுத்த வேண்டும். அதனால் புதிதாக  வருபவர்களை   திருப்பி  அனுப்புவது இலங்கையில் உள்ள தமிழர்களைப் பொறுத்த வரை ஒரு நல்ல செய்திதான்.

பல காலத்திற்கு முன் வெளிநாடு  வந்தவர்கள் தம்மைப் பலப்படுத்தி விட்டதால் அவர்கள்  மீண்டும்  திரும்பப்  போவதில்லை. வெளிநாடுகளுக்கு  இடம்பெயர்ந்த  சுமார்  15  லட்சம்   ஈழத் தமிழர்களின்  5  லட்சம் தமிழர்களாவது  திரும்ப  வேண்டும். இதற்கு  ஒரே  வழி  திருப்பி  அனுப்புவது மட்டுமே.

ஏனைய 10 லட்சம் மக்களும்  புலம்பெயர்  நாடுகளில்  இருந்து  தாயகத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடட்டும்.  

யாழ் குடாவில் தமிழர்களே தமிழருக்கு விரோதிகள்

யாழ். குடாநாட்டின்  பல  பகுதிகளில்  உள்ள பெரும் நிலப்பரப்புக்கள்  சிங்கள முதலாளிகளுக்கு  விற்கப்பட்டு  வருவதாகத்  தெரிய  வருகிறது.

குறிப்பாக  யாழ்  குடாநாட்டின்  தென்  பகுதியில்  உள்ள  இக்காணிகளில் பெரும்பாலானவை  தென்னந்தோட்டஙகள்  நிறைந்தவை.

உரிமையாளர்கள்  தமிழர்கள்தான். ஆனால், பலர்  வெளிநாடுகளில்  வாழ்கிறார்கள். இக்காணிகளை  தமிழ்  வர்த்தகர்கள்  ஊடாகவும், இடைத்தரகர்கள்  ஊடாகவும்  பல தென்பகுதியினர் வாங்கி வருகிறார்கள்.

தமது காணிகளை யார் வாங்குகிறார்கள் எனத் தெரியாமல் விற்பதைத் தமிழர்கள் இக்கால கட்டத்தில்  தவிர்க்க  வேண்டும். அதிக  பணம் கிடைக்கிறது  என்பதற்காக வெளிநாடுகளில் உள்ளவர்கள் இப்படிச் செயற்படுவது யாழ்ப்பாணத்தில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

இக்காணிகள் தென்பகுதி மக்களின் குடியேற்றத்திற்கு கூடப் பயன்படுத்தப் படலாம். அதனால், தமது   காணிகளை  ஒரு  தமிழர்  குறிப்பாக  அப்பகுதியைச்  சேர்ந்தவர் வாங்குவதை தேசவழமைச் சட்டத்திற்கு அமைய உறுதிப்படுத்த வேண்டும்.

இக்கால கட்டத்தில் தமிழருக்கு ஒரு பெரும் கடமை இருக்கிறது. அரச காணிகள் யாழ்ப்பாணத்தில் அதிகமாக இல்லை. தமிழர்கள் தமது காணிகளை விற்காவிட்டால், யாரும் அன்னியர் குடியேற  முடியாது. நாமே எமக்கு விரோதிகளா?

இதன் ஒரு கட்டமாக எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்திற்கருகாமையில் 9 வீதிக்கு அருகாமையில் உள்ள நூறு ஏக்கர் நிலம் அண்மையில் சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இன்னொரு சிங்கள வர்த்தகர் கிளாலிக்கும் புலோப்பளைக்கும் இடையே 80 ஏக்கர் நிலத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அறியப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சிங்கள இராணுவ மேலதிகாரிகளும் இந்த நிலங்களை வாங்குவதில் அக்கறைகாட்டி வருவதாகத் தெரிய வருகிறது.

கைத்  தொழிற்பேட்டை  மற்றும்  தொழிற்சாலை  அபிவிருத்திக்காக  எனக் காரணம் கூறப்பட்டாலும்  அது போலியான காரணம் என்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதே இதன் பின்னாலுள்ள காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இது தவிரவும், வசாவிளானில் இன்னொரு சிங்கள வர்த்தகர் பண்ணை ஒன்றை நிறுவியுள்ளதாகவும், இன்னொன்று கீரிமலைக்கு அருகில் நிறுவப்பட:டள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது இஸ்ரேல் போல திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை அரசின் நடவடிக்கைகளில் ஒன்று என விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.

குடாநாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து மேற்குக்கடற்கரைப் பகுதி வரையான பிரதேசங்களும், வெற்றிலைக்கேணி பிரதேசமும் கிளாலியிலிருந்து எழுதுமட்டுவாள், நாவற்குளி, அரியாலை கிழக்குப் பகுதிகளும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாகி வருகிறது.

இந்நிலை தொடரும் பட்சத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ் மக்கள் விரைவில் சிறுபான்மையாக்கப்பட்டு விடுவர்.

இது ஆயுதமற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மீதான ஒரு  அடக்குமுறையே அன்றி வேறல்ல.

Friday 11 February 2011

ஆனந்தசங்கரியின் பாதுகாப்பு குறைப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு கடந்த வருடங்களில்  66 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்  வழங்கப்பட்டு இருந்தார்கள்தற்போது அரசால்  அவ்வெண்ணிக்கை 24 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இது ஒரு  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று சங்கரி தரப்பில் கூறப்படுகின்றது.

ஆனந்தசங்கரியின் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி சந்திரிக்காவின் காலம் தொட்டு அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் தேவைப்படும் பட்சத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. அவருடைய பாதுகாப்புப் பணியில் நிரந்தரமாக அறுபத்தி ஆறு போ் கடந்த காலங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அத்துடன், அவர்கள் பயணம் செய்வதற்கான வாகனங்களும் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான முக்கியமான மிதவாத் தலைவராக சர்வதேசம் அவரை ஏற்றுக் கொண்டிருந்த நிலையில், அதனை வைத்து அரசாங்கம் அரசியல் லாபம் கண்டிருந்தது. அதன் காரணமாக அவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலும் அதிகரித்திருந்தது.

தற்போது அவரால் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

Thursday 10 February 2011

உலகின் புதிய நாடாக தென் சூடான்

உலகின் புதிய நாடாக தென் சூடான் இடம்பெறவுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தென் சூடானுக்கு ஆதரவாக 98.83 சதவீத வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். முறைப்படி ஜூலை மாதம் தான் தெற்கு சூடான் தனி அரசாக அறிவிக்கப்படவுள்ளது. இதன் தலைநகர் ஜீபாவாக இருக்கும்.

நயினாதீவு நாக விகாரையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை

நயினாதீவு  விகாரையில்  பாரிய  புத்தர் சிலையொன்று  புதிதாக அமைக்கப் படவுள்ளதாக வடபிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் சுசித வீரசேகர   தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் இருந்து வரும் பௌத்தர்களின் யாத்திரைத்  தலமாக  நயினாதீவு  விகாரையை மற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  நயினாதீவு  நாகதீப  ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில்   கடற்படை இறங்கியுள்ளது.

அத்துடன் விகாரையின்  முகப்பும்  அதற்கான  நடைபாதையும், இறங்குதுறை மற்றும்  அதற்காக  நடைபாதை ஆகியனவும் புதிதாக அமைக்கப்படவுள்ளன. சுமார்  4 கோடி  ரூபா  செலவில்  இந்தப்  புனரமைப்பு  வேலைகளை கடற்படையினர்   மேற்கொண்டு  வருகின்றனர்.

வடக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது மற்றும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியிது.

ஏற்கனவே,  சங்கமித்தை  வந்து  இறங்கிய  இடம்  எனக்  கூறும்  மாதகலின் சம்பில்துறையில்  2004ம்  ஆண்டில்  பௌத்த விகாரையொன்றை  கடற்படை  அமைத்தமை  இங்கு  குறிப்பிடத்தக்கது.

சூடான் போல இலங்கையிலும் சர்ஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - அக்ட் நௌவ்

சூடான் போன்ற சர்ஜன வாக்கெடுப்பு இலங்கையிலும் நடத்தப்பட வேண்டுமென அக்ட் நௌவ் (Act Now) என்ற பிரித்தானிய நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
அண்மையில் ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழகத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உரையாற்றிய போது இது தொடர்பிலும் பொதுமக்கள் இழப்பு தொடர்பிலும் இந்நிறுவனத்தின் சார்பில் ரிம் மார்டின் என்ற பணியாளர் பான் கீ மூனிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 பேர் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அண்மையில் சூடானில் நடைபெற்றதனைப் போன்று இலங்கையிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா எனவும், அதற்கு பான் கீ மூன் ஏற்பாடு செய்வாரா எனவும் ரின் மார்டின் கேள்வி எழுப்பியுள்ளார்.