Friday 18 February 2011

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்; புலம்பெயர் தமிழர்கள் மீதான பழிவாங்கலா?

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாட்டை
தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி,  இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை  வழங்குவதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும்  அங்கீகாரத்துக்காக  சமர்ப்பிக்கப்  பட்ட  விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. 

ஆனால், ஏற்கனவே  இரட்டைப்  பிரஜாவுரிமை  உள்ளவர்களை  இது  பாதிக்காது.  அவர்கள்  தொடர்ந்தும்   இரட்டைப்  பிரஜாவுரிமை  உள்ளவர்களாகவே  இருப்பார்கள்.

வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கையர்  மேலதிக  வரியோ  ஏனைய  கட்டுப்பாடோ  இல்லாமல்   இலங்கையினுள்ளும்  சொத்துக்கள் வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும்  அவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற வேண்டுமென்பது அவசியமாகும்.

இதற்காக ஒருவரிடமிருந்து இலங்கை அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவைக் கட்டணமாக அறவிட்டு வந்தது.

இதில் சில தீமைகளும் இருந்தன. இரட்டைப்  பிரஜாவுரிமை பெற்றவர் இலங்கையில்  உள்நாட்டவர் போல கருதப்படுவார். கைதானால், மற்றைய நாடு அவர்  தொடர்பில்  எந்த  நடவடிக்கையையும்  எடுக்காது. ஏனெனில் அவர்  இலங்கையில்  ஓர்  வெளிநாட்டவர்  அல்ல. இலங்கைக்கு வெளியில் எதுவும் நடந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாட்டு உதவியைத் தூதரகம் ஊடாக நாடலாம்.

பெரும்பாலும்  புலம்பெயர்ந்த   இலங்கைத்  தமிழர்களே   இரட்டைப் பிரஜாவுரிமை   திட்டத்தின் கீழ் பெருமளவில் நன்மையடைந்தனர். அதனால், இது  புலம்பெயர் தமிழர்களைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,  பசில் ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அமெரிக்காவிலும் பிரஜாவுரிமை பெற்ற இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: