Friday 29 July 2011

4 பாராளுமன்ற ஆசனங்களை இழந்தது யாழ்.மாவட்டம்

வாக்காளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளமையால், யாழ்.மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற ஆசனங்களை  குறைப்பதென தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதுவரை 9 ஆக இருந்த பாராளுமன்ற ஆசனங்களில்  4 ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதால்  தற்போது யாழ்.மாவட்டத்திற்கென 5 ஆசனங்களே காணப்படுகின்றன.
குறைக்கப்படும் இந்த நான்கு ஆசனங்களும் இரத்தினபுரி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு வழங்குவது எனவும் தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
1989ஆம் ஆண்டு 11 ஆசனங்களுடன் இருந்த யாழ் மாவட்டம், 1994 ஆம் ஆண்டு 10 ஆசனங்களாகக் குறைந்து, 2000 ஆம் ஆண்டு அது 9 ஆக மேலும் குறைக்கப்பட்டிருந்தது.
யாழ்.மாவட்டத்தில் 816,005 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை யுத்தம், இடப்பெயர்வுகள் காரணமாக 2010 ஆண்டின் வாக்காளர் கணக்கெடுப்பின்படி 484,791 ஆக குறைவடைந்துள்ளது.
மாற்றமடைந்த இந்த வாக்காளர் எண்ணிக்கை விகிதாசாரத்துக்கேற்ப யாழ் மாவட்டத்துக்கு இதுவரை இருந்துவந்த ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அது 5 ஆசனங்கள் ஆக்கப்பட்டுள்ளது.
கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனமுமாக மொத்தம் 9 ஆசனங்கள் யாழ் மாவட்டம் சார்பாகக் கைப்பற்றப்பட்டன.
இனிவரும் காலங்களில் இந்த ஆசனங்களின் எண்ணிக்கை 5ஆகக் குறைவடையவிருப்பதால், பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மேலும் குறைவடையும் நிலை தோன்றியுள்ளது