Monday 19 September 2011

நோர்வே உள்ளூராட்சித் தேர்தல்களில் 11 தமிழர்கள் தெரிவு


நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர்.

ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வேறுவேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களில் ஹம்சாயினி குணரட்ணம், புலேந்திரன் கனகரட்ணம், சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, திலகவதி சண்முகநாதன் ஆகியோர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாக முதன்முறை தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்முறைத் தேர்தலில் இரண்டாவது தடவையாக இந்த ஐவரும் மீள்தெரிவாகியுள்ளனர்.

முதன்முறையாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பெருமளவில் விருப்புவாக்குகள் அளித்தமை முக்கிய காரணியென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடாத்தப்படுகின்றன. நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் ஒன் அறைவல் வீசா முறை ரத்து


மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு மட்டுமே எதிர்வரும் காலங்களில் ஒன் றைவல் விசா வசதி வழங்கப்படும். 

78 நாடுகளின் பிரஜைகள் ஒன்லைன் முறையில் இணையம் ஊடாக விசா பெற்றுக்கொள்ள முடியும். குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் றைவல் விசா முறை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கைக்கான குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Saturday 10 September 2011

நீதியாகச் செயற்படத் தயாரில்லாத சிவாஜிலிங்கம்

வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக ஒய்வு பெற்ற கல்வி அதிகாரியான ஆனந்தராஜ் விருப்பு வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ் தேசியக் ட்டமைப்பின் தலைமை தேர்தலுக்கு முன்னர் எடுத்த முடிவின் பிரகாரம் கூடிய விருப்பு வாக்கினை பெற்றுக்கொண்டவரே தலைவரென்ற அடிப்படையில் ஆனந்தராஜ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் இது வரை சத்தியப்பிரமாணத்தினை செய்யாது விலகி இருந்து வருகின்றார். இதனால் கூட்டத்தினை கூட்டமுடியாது குழப்ப நிலை தொடர்கின்றது. போதிய பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறிப்பிட்டு சொல்லத்தக்கதான தீர்மானமெதனையும் சபை எடுக்க முடியாது உள்ளது.

மக்களால் நிராகருக்கப் பட்டவர் சர்வாதிகாரமாக பதவியைப்பெற முயற்சி. மகிந்தவை தாக்குவதற்கு தகுதியுடையவரா?

மீண்டும் குழப்ப அரசியலுக்குள் தமிழ் தரப்பு

எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட சந்திப்பினைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுஇந்த சந்திப்பின் போது கிறிஸ் பேய் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

மீண்டும் குழப்ப அரசியலை நடாத்த தமிழ் தரப்பு ஆரம்பித்துள்ளது. ஆனந்தசங்கரி தலைமை தாங்கிய போதே அது குழப்பமாகும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம். கடந்த வாரம் இந்தியாவில் தமிழரின் தீர்வு தொடர்பிலும் அவர் குழப்பியது தெரிந்ததே

கூட்டமைப்பு ஆனந்தசங்கரிக்குள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறதா

மக்கள் போராடத் தயாராக உள்ள ஒரு கால கட்டத்தில் அதற்கு தலைமை தாங்க கூட்டமைப்பு தயாராகவில்லை. 1977இல் இளைஞர்களுக்கு தலைமை தாங்காமல் வழிநடாத்தாமல் போனதால் கூட்டணி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழருக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு கொண்டுள்ளதா

வேறு யாரும் இல்லை என்பதற்காக தகுதியில்லாதவர்கள் இடைவெளியை நிரப்ப முடியுமா? ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் இது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள்


பொதுமக்கள் சோதனை, வீடுகளை சோதனையிடுதல், வீதித் தடைகளை ஏற்படுத்துதல், ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற அதிகாரங்களை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி முப்படையினருக்கு  வழங்கியுள்ளார்

தேவேளை, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் ரத்தான புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன புவநேக பண்டார ராஜகுருவின் நியமனமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி நீடித்துள்ளார்.

Wednesday 7 September 2011

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும் தொடரும் சீமான் கைது

மூவரின் மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி சீமான் வேலூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தார். ஆனால் அதற்கு பொலீஸ் அனுமதி மறுத்து விட்டது. தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்பட்டனர்

யுத்தக் குற்றத்திற்காக



ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் யுகஸ்லாவிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மொம்சிலோ பெரிசிக் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொஸ்னியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மொம்சிலோ பெரிசிக் நேரடியாக படுகொலைகளையோ அல்லது வேறும் சித்திரவதைகளையோ மேற்கொள்ளவில்லை என்ற போதிலும் தொலைவில் இருந்து சித்திரவதைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பூர் அனல் மின் நிலையம்

போர் காரணமாக இடம் பெயர்ந்த ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சம்பூரில் மீள் குடியேற்றப்படாதுள்ள நிலையில், சம்பூர் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்த ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.

ஒவ்வொரு நபரும் தனது இருப்பிடத்தற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி வந்த இந்தியா தனது கூற்றுக்கு முரணாகச் செயற்படுவது தவறானது, அதன் போலி முகத்தை அம்பலப்படுத்துகிறது.

Saturday 3 September 2011

ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோமாக!

கடந்த ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி மாலை மறைந்து இருள் படரும் இரவு. ஸ்காபுறொ புறொகிறஸ் வீதியில் அமைந்திருக்கின்ற சீனக் கலாச்சார மண்டபம் ரசிகர்கள் கூட்டத்தால் நிறைந்து வழிகின்றது.

திரு. திருமதி கதிர்காந்தன் தம்பதிகள் பெற்றெடுத்து அன்புச் செல்வங்கள் துசியந்தனின் மிருதங்க அரகேற்றமும், அவரது சகோதரி சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றமும் மேடையேறும் இரட்டை அரங்கேற்றத்தால் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த கலைச்செல்வங்களைப் பெற்றெடுத்த பெற்றோருக்கோ அதைவிடஅதிக மகிழ்ச்சி.

வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களின் மாணவன் துசியந்தனின் மிருதங்க அரங்கேற்றம் இனிதே நிறைவு பெற்று அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்ற துசியந்தன் மகிழ்ந்து நிற்க மேடையில் தோன்றிய கதிர்காந்தனும் அவரது துணைவியாரும் அனைத்து கலைஞர்களையும் அன்பளிப்புக்கள் வழங்கி பாராட்டுகின்றனர்.

மேடையில் மகிழ்ச்சி பொங்க நின்ற கதிர்காந்தன் மீண்டும் மண்டபத்தின் நான்கு திசைகளிலும் மகிழ்ச்சியுடன் நடமாடியபடி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சமூகமளித்தமைக்காக நன்றி கூறுகின்றார்.

மேடையில் அவரது இனிய புதல்வியும் ஸ்ரீமதி பத்மினி ஆனந்தின் மாணவியுமாகிய சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆரம்பமாகின்றது.

மண்டபத்தின் முன்பகுதியில் நின்ற கதிர்காந்தன் மேடையின் பக்கத்தே செல்லுகின்றார். எங்கிருந்து காலன் அங்கு வந்து அவரைத் தாக்கினானோ தெரியாது.

தீடீரென நெஞ்சைப் பிடித்தபடி அருகில் நின்ற கலைஞர் கதிர் துரைசிங்கத்திடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறுகின்றார்.

உடனே அவரது தோற்றத்தை நன்கு அவதானித்த கதிர் துரைசிங்கம்அம்புலன்ஸ் மருத்துவ வண்டிக்கு அழைப்பு விடுக்கும்படி நண்பர்களிடம் வேண்டினார்.

இதற்கிடையில் மாரடைப்பால் தாக்கமடைந்த கதிர்காந்தன் நிலத்தில் சரிய அங்குஅம்புலன்ஸ் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. ஆனால் அவர்கள் அளித்த முதலுதவியினால் கூட கதிர்காந்தனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

தனது இனிய புத்திரச் செல்வங்களின் இரட்டை அரங்கேற்றத்தை முழுமையாக கண்டு களிக்க முடியாத ஒரு பாவியாக அவர் இடையில் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார்.

கலையேற்றத்தால் களிப்புற்றிருந்த அனைவரும் அன்று கதிகலங்கிப் போனார்கள். கனடாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் செய்திகள் பரவியது. அனைவரும் பதறினார்கள்.

மறைந்த அந்த கலா ரசிகனி;ன் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் ஸ்காபுறோவில் நடைபெற்றன. அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோமாக.

நன்றி: தமிழ்வின் 

பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கை


இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்க உள்ளனர். 193 நாடுகளில் 129 நாடுகள் தமது கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். அதில் 124 நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் இன்னமும் ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் பாலஸ்தீனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

கவிஞர் செல்வியின் 20 ஆண்டுகளின் நினைவில்


1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கவிஞர் செல்வி விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டதுவிடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாடகமொன்றை அரங்கேற்றத் தயராகிக் கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது

செல்வி தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கியப் பங்கினை வகித்தார் செல்வி. 1993 டிசம்பரில் வெளியான கொழும்பு சரிநிகர் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன

பிற்பாடு செல்வி கொல்லப்பட்டதனை இலண்டன் அம்னஸ்டி இன்டர்நேஷனல் செவிவழிச் செய்தியொன்றில் உறுதிப்படுத்தியது. தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம். அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது
நன்றி: ஜி.ரி.என்.

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிக்குப் பதிலாக புதிய சட்டம் !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 27 ஆவது சரத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 புதிய கட்டளைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவினால் விதிக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இரண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பெயரிடப்பட்டிருப்பதும் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதும் அதேபோல் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் என்பதால் அந்த ஒழுங்கு விதிகள் ரத்தாகும் அதேநேரம், அதற்குப் பதிலாகவே  புதிய சட்டம்.

இலங்கையில் காணாமல் போனோர் பன்னிரண்டாயிரம் பேர்


இலங்கையில் காணாமல் போனோர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் போனோர் குறித்த உலக தினத்தையிட்டு (ஆவணி 30) விடுத்துள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐநா அறிக்கைத் தரவுகளின்படி இலங்கை காணாமல் போனோர் அதிகம் உள்ள நாடுகளில் இரண்;டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 30 வருடங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அரசும் கிளர்ச்சியாளர்களும் தான் இந்தக் காணாமல் போதல்களுக்குக் காரணம்.

இலங்கையில் சிறுபான்மை இனம் என்று ஒன்று கிடையாது – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது 'இலங்கையில் சிறுபான்மை இனம் என்று ஒன்று கிடையாது. ஒரே தேசம், ஒரே நாடு என்ற கோட்பாட்டை நிலைநாட்டுவதற்காக எவருக்கும் லஞ்சத்தையோ நாட்டின் ஒரு பகுதியையோ கொடுக்கத் தயாரில்லை;. தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரே தேசம், நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்