Saturday 3 September 2011

ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோமாக!

கடந்த ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி மாலை மறைந்து இருள் படரும் இரவு. ஸ்காபுறொ புறொகிறஸ் வீதியில் அமைந்திருக்கின்ற சீனக் கலாச்சார மண்டபம் ரசிகர்கள் கூட்டத்தால் நிறைந்து வழிகின்றது.

திரு. திருமதி கதிர்காந்தன் தம்பதிகள் பெற்றெடுத்து அன்புச் செல்வங்கள் துசியந்தனின் மிருதங்க அரகேற்றமும், அவரது சகோதரி சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றமும் மேடையேறும் இரட்டை அரங்கேற்றத்தால் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த கலைச்செல்வங்களைப் பெற்றெடுத்த பெற்றோருக்கோ அதைவிடஅதிக மகிழ்ச்சி.

வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களின் மாணவன் துசியந்தனின் மிருதங்க அரங்கேற்றம் இனிதே நிறைவு பெற்று அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்ற துசியந்தன் மகிழ்ந்து நிற்க மேடையில் தோன்றிய கதிர்காந்தனும் அவரது துணைவியாரும் அனைத்து கலைஞர்களையும் அன்பளிப்புக்கள் வழங்கி பாராட்டுகின்றனர்.

மேடையில் மகிழ்ச்சி பொங்க நின்ற கதிர்காந்தன் மீண்டும் மண்டபத்தின் நான்கு திசைகளிலும் மகிழ்ச்சியுடன் நடமாடியபடி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சமூகமளித்தமைக்காக நன்றி கூறுகின்றார்.

மேடையில் அவரது இனிய புதல்வியும் ஸ்ரீமதி பத்மினி ஆனந்தின் மாணவியுமாகிய சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆரம்பமாகின்றது.

மண்டபத்தின் முன்பகுதியில் நின்ற கதிர்காந்தன் மேடையின் பக்கத்தே செல்லுகின்றார். எங்கிருந்து காலன் அங்கு வந்து அவரைத் தாக்கினானோ தெரியாது.

தீடீரென நெஞ்சைப் பிடித்தபடி அருகில் நின்ற கலைஞர் கதிர் துரைசிங்கத்திடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறுகின்றார்.

உடனே அவரது தோற்றத்தை நன்கு அவதானித்த கதிர் துரைசிங்கம்அம்புலன்ஸ் மருத்துவ வண்டிக்கு அழைப்பு விடுக்கும்படி நண்பர்களிடம் வேண்டினார்.

இதற்கிடையில் மாரடைப்பால் தாக்கமடைந்த கதிர்காந்தன் நிலத்தில் சரிய அங்குஅம்புலன்ஸ் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. ஆனால் அவர்கள் அளித்த முதலுதவியினால் கூட கதிர்காந்தனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

தனது இனிய புத்திரச் செல்வங்களின் இரட்டை அரங்கேற்றத்தை முழுமையாக கண்டு களிக்க முடியாத ஒரு பாவியாக அவர் இடையில் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார்.

கலையேற்றத்தால் களிப்புற்றிருந்த அனைவரும் அன்று கதிகலங்கிப் போனார்கள். கனடாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் செய்திகள் பரவியது. அனைவரும் பதறினார்கள்.

மறைந்த அந்த கலா ரசிகனி;ன் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் ஸ்காபுறோவில் நடைபெற்றன. அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோமாக.

நன்றி: தமிழ்வின் 

No comments: