Tuesday 7 April 2020

யாழ்ப்பாணத்தின் முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருகிறது

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசி மூலம் உரையாடி இதனை உறுதி செய்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 22ம் திகதி விவேகானந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விவேகானந்தன் இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா நோயுடன் இலங்கை வந்த சுவிஸ் போதகரை தொழில் நிமித்தம் சந்திக்க சென்ற வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sunday 5 April 2020

இலங்கையில் கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் நால்வருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 166 ஆகும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இதுவரை காலமும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

எனினும் தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்றிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோரின் தீவிர முயற்சியிலேயே இந்த பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக செய்யக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் பாதுகாப்பான முறையிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.