Monday 14 February 2011

ஒரு சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அரசியல் இயக்கம் சரணாகதி அடையலாமா?

அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச் சாட்டுக்களை சுமத்துவதை தவிர்க்குமாறு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசாங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் காரணமாக அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் பிரச்சினையாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கோரிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாய்திறக்காது என செய்தி  வெளியாகியுள்ளது. அது மட்டுமா?

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் குறித்து எடுத்து விளக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக விரைவில் மகாநாயக்கர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனுடன் இணைந்ததாக மகாநாயக்கர்கள் மற்றும் தெற்கின் ஏனைய முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோருடனும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாம்.

தனி  நபர்கள்  சரணாகதி  அடைவது  பற்றி  மக்களுக்கு  கவலையில்லை. ஒரு  சிறுபான்மை  இனத்தைப்  பிரதிநிதித்துவப்  படுத்தும்  ஒரு  அரசியல்  இயக்கம்  உரிமைகளைப் பெற பேசுவதாகக் கூறிக் கொண்டு இப்படியாக  நடந்து  கொள்வதை  எந்த தன்மானமுள்ள  தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

தமது  தவறை மறைக்க இராஜ தந்திரம் எனச் சொல்லலாமா?
மானம் போனபின் வாழ்வு எதற்கு?
முடியாவிட்டால் வழிவிட்டு ஒதுங்குவதே பொருத்தமானது. செய்வார்களா?

No comments: