Saturday 12 February 2011

யாழ் குடாவில் தமிழர்களே தமிழருக்கு விரோதிகள்

யாழ். குடாநாட்டின்  பல  பகுதிகளில்  உள்ள பெரும் நிலப்பரப்புக்கள்  சிங்கள முதலாளிகளுக்கு  விற்கப்பட்டு  வருவதாகத்  தெரிய  வருகிறது.

குறிப்பாக  யாழ்  குடாநாட்டின்  தென்  பகுதியில்  உள்ள  இக்காணிகளில் பெரும்பாலானவை  தென்னந்தோட்டஙகள்  நிறைந்தவை.

உரிமையாளர்கள்  தமிழர்கள்தான். ஆனால், பலர்  வெளிநாடுகளில்  வாழ்கிறார்கள். இக்காணிகளை  தமிழ்  வர்த்தகர்கள்  ஊடாகவும், இடைத்தரகர்கள்  ஊடாகவும்  பல தென்பகுதியினர் வாங்கி வருகிறார்கள்.

தமது காணிகளை யார் வாங்குகிறார்கள் எனத் தெரியாமல் விற்பதைத் தமிழர்கள் இக்கால கட்டத்தில்  தவிர்க்க  வேண்டும். அதிக  பணம் கிடைக்கிறது  என்பதற்காக வெளிநாடுகளில் உள்ளவர்கள் இப்படிச் செயற்படுவது யாழ்ப்பாணத்தில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

இக்காணிகள் தென்பகுதி மக்களின் குடியேற்றத்திற்கு கூடப் பயன்படுத்தப் படலாம். அதனால், தமது   காணிகளை  ஒரு  தமிழர்  குறிப்பாக  அப்பகுதியைச்  சேர்ந்தவர் வாங்குவதை தேசவழமைச் சட்டத்திற்கு அமைய உறுதிப்படுத்த வேண்டும்.

இக்கால கட்டத்தில் தமிழருக்கு ஒரு பெரும் கடமை இருக்கிறது. அரச காணிகள் யாழ்ப்பாணத்தில் அதிகமாக இல்லை. தமிழர்கள் தமது காணிகளை விற்காவிட்டால், யாரும் அன்னியர் குடியேற  முடியாது. நாமே எமக்கு விரோதிகளா?

இதன் ஒரு கட்டமாக எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்திற்கருகாமையில் 9 வீதிக்கு அருகாமையில் உள்ள நூறு ஏக்கர் நிலம் அண்மையில் சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இன்னொரு சிங்கள வர்த்தகர் கிளாலிக்கும் புலோப்பளைக்கும் இடையே 80 ஏக்கர் நிலத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அறியப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சிங்கள இராணுவ மேலதிகாரிகளும் இந்த நிலங்களை வாங்குவதில் அக்கறைகாட்டி வருவதாகத் தெரிய வருகிறது.

கைத்  தொழிற்பேட்டை  மற்றும்  தொழிற்சாலை  அபிவிருத்திக்காக  எனக் காரணம் கூறப்பட்டாலும்  அது போலியான காரணம் என்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதே இதன் பின்னாலுள்ள காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இது தவிரவும், வசாவிளானில் இன்னொரு சிங்கள வர்த்தகர் பண்ணை ஒன்றை நிறுவியுள்ளதாகவும், இன்னொன்று கீரிமலைக்கு அருகில் நிறுவப்பட:டள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது இஸ்ரேல் போல திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை அரசின் நடவடிக்கைகளில் ஒன்று என விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.

குடாநாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து மேற்குக்கடற்கரைப் பகுதி வரையான பிரதேசங்களும், வெற்றிலைக்கேணி பிரதேசமும் கிளாலியிலிருந்து எழுதுமட்டுவாள், நாவற்குளி, அரியாலை கிழக்குப் பகுதிகளும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாகி வருகிறது.

இந்நிலை தொடரும் பட்சத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ் மக்கள் விரைவில் சிறுபான்மையாக்கப்பட்டு விடுவர்.

இது ஆயுதமற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மீதான ஒரு  அடக்குமுறையே அன்றி வேறல்ல.

No comments: