Sunday 28 August 2011

கனடிய ஈழத் தமிழரின் கதாநாயகன் அமரர் ஜக் லெய்டன்

மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் ஈழத் தமிழர்களின் நண்பருமான அமரர் ஜக் லெய்டனிற்கு கனடியத் தமிழர் சமூகம் உணர்வு பூர்வமான அஞ்சலியை இன்று செலுத்தியது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வினை தமிழ் மக்கள் நடத்திய விதம் கனடியத் தேசிய ஊடகங்களை வெகுவாகக் கவர்ந்ததோடு இது தொடர்பான செய்திகளையும் அவை வெளியிட்டுள்ளன.

“Thank You Jack”   என்ற பாரிய பதாதகையுடன் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு தாமாக வருகை தந்த கனடியர்களும் பல்லின மக்களும் தமிழர்களுடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தாம் தமிழர்களையிட்டுப் பெருமையடைவதாக நேரடியாகவே பாராட்டினர்.

தமிழர்களால் விநியோகிக்கப்பட்ட ரீ-சேட்களை தாமும் வாங்கியணிவதில் பராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உள்ளிட்ட கனடியர்கள் மும்முரமாக ஈடுபட்டதை கனடியத் தொலைக்காட்சிகள் முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தன.

கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் ஏற்பாட்டில் விநியோகிக்கப்பட்ட இந்த ரீ-சேட்களிற்கு பெருமளவு மவுசு ஏற்பட்டு இறுதியில் அவை பற்றாக்குறையாகும் அளவிற்கு நிலைமை சென்றிருந்தது.

தமிழர்களால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அது பல்லின மக்களின் நிகழ்வாக அவர்களின் பங்குபற்றுதலுடன் நடந்தது அனைவரையும் கவர்ந்த விடயமாகவிருந்தது

ஜக் லெய்டனின் மனைவி தமிழர்களுடன் வந்து கரிசனையுடன் அளாவளாவினார். ஜக் லெய்டனின் மகன் மைக் லெய்டன் தமிழர்கள் ஒவ்வொருவரிற்கும் தனது நன்றியறிதலைத் தெரிவிக்குமளவிற்கு தமிழர் சமுதாயத்துடனேயே ஒன்றியிருந்தார்.

கனடியப் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் மக்களோடு மக்களாக இந்த நிகழ்வு ஏற்பாடுகளில் கலந்து கொண்டிருந்தார். அமரராகிவிட்ட ஜக் லெய்டனால் ஈழத் தமிழருக்காக உருவாக்கப் பட்ட ஒரே மக்கள் பிரதிநிதி அவர். ஈழத் தமிழருக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைப் உருவாக்கக் காரணமாக இருந்தவர் அமரர் ஜக் லெய்டன். அதற்காக பலவழிகளில் உதவியவர் அமரர் ஜக் லெய்டன். கடந்த 25 வருடமாக ஈழத் தமிழரின் பல குறைகளுக்கு தீர்வுகாண உதவியவர் அமரர் ஜக் லெய்டன். தீர்வு கண்டவர் அமரர் ஜக் லெய்டன். தமிழர் சமுதாயத்தைக் கனடிய தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் காரணமாக இருந்தவர் அமரர் ஜக் லெய்டன். கனடிய ஈழத் தமிழரின் கதாநாயகன்  அமரர் ஜக் லெய்டன்


ஈழத் தமிழரின் 'மாமனிதனுக்கு' நாமும் அஞ்சலி செலுத்துகிறோம். உன் வாழ் நாளின் நிறைவாக கடமை புரிந்து விட்டாய் மாமனிதனே, இனி நீ அமைதியாகத் துயில் கொள்வாயாக



No comments: